×

சம்மரை சமாளிப்பது எப்படி? ஹெல்த் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை வந்துவிட்டாலே உடல் எல்லாம் தகிக்கும். நீர், நிலம் யாவும் தீயாய் மாறி வியர்வையாய் சுரக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை சம்மர் வந்துவிட்டால் சரும நோய் முதல் செரிமானப் பிரச்சனை வரை பலவகையான இம்சைகளை அனுபவிப்பார்கள். இந்தக் கொடூரமான கோடையை சமாளிப்பது எப்படி என்று பார்ப்போம்.

காய்கறிகள்

காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் வெங்காயம் தடுக்கிறது.

பழங்கள்

பழங்கள் உண்பது கோடைகாலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.
கோடை வெயிலை தவிர்க்க தர்பூசணி சாப்பிடுவது அவசியம் தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் பாதுகாக்க சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் வெப்பம்

உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.

நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

அம்மை நோய்கள்

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மை வந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம். அம்மை நோயின் தாக்கத்தை குறைக்க மஞ்சள், வேப்பிலையை பயன்படுத்தலாம்.

உணவு முறைகள்

நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு, சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

சருமத்தைப் பாதுகாக்க!

சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.வெள்ளரிச்சாற்றை முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும். ஆரஞ்சு தோல் பவுடர், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.நம் வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதுமானது.

ஆடைகள் கவனம்

நன்கு சுத்தமாக்கப்பட்ட தரமான பருத்தி ஆடைகளையே எப்போதும் கோடைக்குத் தேர்ந்தெடுங்கள். இது வெயிலில் இருந்து உங்களைக் காத்து உடலில் உஷ்ணம் ஏறாமல் காக்கும். சற்று தளர்வான ஆடைகளையே அணிந்திருங்கள். காற்றோட்டம் முக்கியம். இல்லாவிடில் வியர்த்து உடலை கிருமிகளின் கூடாரமாக்கிவிடும்.நல்ல தரமான உள்ளாடைகளை அணியலாம். மிகவும் தளர்வாகவும் அல்லாமல், மிகவும் டைட்டாகவும் அல்லாமல் ஃபிட்டான உள்ளாடைகளை அணிய வேண்டும். தினசரி உள்ளாடைகளை மாற்ற வேண்டியது மிக அவசியம். அதிக வண்ணம் கொண்ட ஆடைகளை இயன்றவரை தவிர்த்திடுங்கள். வெண்ணிற அல்லது மென்மையான ஆடைகளே கோடைக்கு ஏற்றவை.

வெயில் அலெர்ட்!

காலை பத்து மணி முதல் மதியம் நான்கு மணி வரை வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில்தான் உச்சபட்ச வெயில் இருக்கும். வெயிலில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கும். எனவே அந்த நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பதே நல்லது.வெளியில் சுற்றும் வேலை இருப்பவர்கள், அந்த நேரத்தில் அதிக தூரம் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு மணி நேரப் பயணம் என்றால் அதை இரண்டாக வகுத்து அரை மணி நேரம் பயணம் செய்ததும் நிழலில் ஒரு கால் மணி நேரமாவது ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும்.

காலையோ மதியமோ வெளியே அருகில் செல்வது என்றாலும் குடையை எடுத்துச் செல்லுங்கள். கருப்பு வண்ண குடைகள் மிகவும் நல்லது.சிறு குழந்தைகளை வெளியே விடாதீர்கள். வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கச் சொல்லுங்கள். இது உடலில் வெப்பநிலையை திடீரென மாற்றுவதால் உடல் தடுமாறும்.

வெளியே செல்லும்போது சருமத்துக்கு சன்ஸ்கிரீன் அணிந்து கொள்ளலாம். இதனால், புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு குறைவாக இருக்கும். இயற்கையான சன்ஸ்க்ரீன்கள் தயாரிப்பது எப்படி என தெரிந்துகொண்டு அதனைப் பயன்படுத்தலாம்.அதிக நேரம் வெயிலில் நிற்காமல் இருப்பது நல்லது.

தொகுப்பு : இளங்கோ

கோடை காலத்தை சமாளிக்க

*கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

*நொறுக்குத் தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.

*பகல் நேரங்களில் இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சைச்சாறு குடிக்கலாம்.

*ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறு எடுத்து கொள்ளலாம்.

*பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

*உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.

*வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.

*வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள்.

*கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

*டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிந்து கொள்ளவது நல்லது.

*வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் உடன் கொண்டு செல்வது அவசியம்.

*காரம் நிறைந்த உணவு பொருள்களை தவிர்ப்பது நல்லது.

*அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீரகத் தண்ணீரை பருகினால் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

*குளிர்ந்த நீரை குடிக்க நினைப்பவர்கள் பானையில் ஊற்றி வைத்து குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.

*கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது அவசியம்.

*அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது அல்லது குறைத்து கொள்வது உடல் நலத்தை காக்கும்.

The post சம்மரை சமாளிப்பது எப்படி? ஹெல்த் டிப்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!